
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. தமிழகத்தை போலவே, பெங்களூருவில் நேற்று (19-05-25) அதிகாலையில் மழை பெய்தது. தொடர்ந்த்ய் 4 மணி நேரம் விடாமல் பெய்த மழையால், பெங்களூருவே வெள்ளக் காடாக மாறியுள்ளது.
சில்க் போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி, மடிவாளா, கே.ஆர்.புரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திடீரென பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள், கடைகள், வணிக வளாகங்கள், சாலைகள் உள்பட அனைத்திலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பெங்களூருவில் உள்ள முக்கிய இடங்களில் மின்விநியோகம் செய்யப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.