Heavy rains lash in Himachal Pradesh ;16 people died in 24 hours

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பருவமழை காரணமாகக்கடந்த சில மாதங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில்மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அளவுக்கு மிஞ்சிய மழை பொழிந்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுத்தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Advertisment

அந்த மாநிலத்தில் உள்ள சோலன் மாவட்டம் ஜாடோன் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சோலன் மாவட்டத்தில் உள்ள மம்லிக் கிராமத்தில் மேக வெடிப்பிற்குப் பிறகு 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 2 வீடுகளும், ஒரு மாட்டுத்தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தீயணைப்புத்துறையினர் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் கடந்த 55 மணி நேரமாக இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. அங்குள்ள மண்டி, சிர்மவுர், சிம்லா, ஹமிர்பூர், பிலாஸ்பூர் மற்றும் சோலன் ஆகிய இடங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisment

அதே போல், சிம்லாவில் உள்ள சுற்றுலாத்தளமான சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன் கோவிலிலும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளது. இந்த நிலச்சரிவு பாதிப்பால் 9 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 16 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றன. இதனால், முக்கிய நெடுஞ்சாலைகள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 800க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், இதனால் 2000க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழை அண்டை மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல இடங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பியாஸ், பாங் அணை, ரஞ்சித் சாகர் மற்றும் சட்லஜ் நதிகளின் அருகில் உள்ள பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டும் என எச்சரிக்கை கொடுத்துள்ளது. இன்று ( 14-08-23) வரை மொத்தம் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த சோதனையான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். மேக வெடிப்பு காரணமாகத்தற்போது வரை 16 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மேலும் பல பேர் இறந்திருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன.