
பல ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி, இட ஒதுக்கீட்டு முறை மூலம் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சில ஆண்டுகளாக கிடைத்து வருகிறது. இட ஒதுக்கீடு மூலம், பல மாணவர்கள் படித்து குடும்பத்தின் முதல் பட்டதாரியாக கடந்த 10 ஆண்டுகளாக மாறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, கிராமத்திலேயே முதல் முறையாக மாணவர் ஒருவர் தற்போது 10வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், பாராபங்கி மாவட்டம், நிஷாம்பூர் என்ற கிராமம் உள்ளது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெரும்பாலான மக்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு காலமாக, இந்த கிராமத்தில் வாழும் எந்த ஒருவரும் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ராம் கேவல் என்ற 15 வயது சிறுவன், அகமதுபூரில் உள்ள இடைநிலைக் கல்லூரியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சகோதரர்களின் மூத்தவரான ராம் கேவல், தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக பகலில் சிறிய வேலைகளைச் செய்து வந்துள்ளார். திருமண ஊர்வலங்களில் விளக்குகளை ஏந்திச் சென்று ஒரு நாளைக்கு ரூ.250 முதல் ரூ.350 வரை சம்பாதித்து தனது குடும்பத்திற்கு உதவி செய்து வந்துள்ளார். அதே சமயம், தனது படிப்பை கைவிடாமல் இரவு நேரத்தில் எண்ணெய் விளக்கேற்றி படித்து வந்துள்ளார். ராம் கேவல் தனது தீராத விடாமுயற்சியால், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கிராமத்தில் முதல் மாணவராக திகழ்ந்துள்ளார்.
இந்த செய்தி குறித்து அறிந்த மாவட்ட நீதிபதி சஷாங்க் திர்பாதி, ராம் கேவல் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து அவர்களை பாராட்டி கெளரவித்தார். ராம் கேவலில் மேற்படிப்பு அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார். இது குறித்து ராம் கேவல் தெரிவித்துள்ளதாவது, “இரவு தாமதமாக வீடு திரும்பினாலும், விளக்கின் கீழ் குறைந்தது இரண்டு மணி நேரம் படிப்பேன். நான் உயர்நிலைப் பள்ளியில் ஒருபோதும் தேர்ச்சி பெற மாட்டேன் என்று கிராமத்தில் சிலர் என்னை கேலி செய்வார்கள். ஆனால் நான் எப்போதும் அவர்கள் கூற்று தவறு என்று நிரூபிப்பேன் என்று நம்பினேன். வறுமை ஒருவரை எல்லாவற்றையும் செய்ய கட்டாயப்படுத்துகிறது. ஆனால், எதுவாக இருந்தாலும் நான் படிக்க விரும்பினேன். நான் பொறியியலாளராக வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்.
கடந்த 78 வருடங்களாக கிராமத்தில் 10வது வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில், முதல் முறையாக ராம் கேவல் என்ற மாணவர் தேர்ச்சி பெற்றிருப்பது தற்போது பேசுப் பொருளாகி மாறியுள்ளது.