Skip to main content

"ஹத்ராஸ் பெண் கௌரவக் கொலை செய்யப்பட்டார்" - காவல்துறைக்கு கடிதம் எழுதிய குற்றவாளிகள்...

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

gj

 

ஹத்ராஸ் பெண்ணை அவரது குடும்பத்தினரே கௌரவக்கொலை செய்துள்ளதாக வழக்கின் குற்றவாளிகள் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன. 

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அப்பெண் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அலிகர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு செப்டம்பர் 22 அன்று அப்பெண்ணிற்கு சற்றே நினைவு திரும்பியது.

 

அப்போது, விசாரணை நடத்திய ஹத்ராஸ் போலீஸாரிடம் அப்பெண், தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிற்கு அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள சூழலில், சிறையில் உள்ள கைதி சந்தீப் மற்ற மூவரின் ஒப்புதலோடு ஹத்ராஸ் மாவட்ட எஸ்பிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எங்கள் நால்வர் மீதும் பலாத்காரம் மற்றும் தாக்குதல் வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். பலியான இப்பெண்ணுடன் எனக்கு இருந்த நட்பின் காரணமாகக் கைப்பேசியிலும் சில சமயம் பேசியுள்ளோம். 

 

Ad

 

எங்களின் இந்த நட்பில் அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. சம்பவத்தன்று அப்பெண்ணுடன் எனக்கு வயல்வெளியில் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவருடன் இருந்த அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரரின் பேச்சைக் கேட்டு நான் அங்கிருந்து எனது வீடு திரும்பி விட்டேன். வீட்டில் எனது தந்தையுடன் கால்நடைகளைக் குளிப்பாட்டும் பணியில் இருந்தேன். அப்போது, கிராமத்தாரால் எனக்குக் கிடைத்த தகவலின்படி, என்னுடன் இருந்த நட்பைக் கண்டித்து அப்பெண்ணை அவரது தாயும், சகோதரரும் அடித்துப் படுகாயப்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால், அப்பெண் பிறகு பரிதாபமாகப் பலியாகிவிட்டார். ஆனால், நான் அப்பெண்ணுடன் எப்போதும் தவறாக நடந்து கொண்டதில்லை. இவ்வழக்கில் என்னுடன் சேர்த்து மற்ற மூவரையும் அப்பெண்ணின் வீட்டார் பொய் புகார் கொடுத்து சிறையில் தள்ளிவிட்டனர். நாங்கள் அனைவரும் நிரபராதிகள். இப்பிரச்சனையில் முறையான விசாரணை செய்து எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஹத்ராஸ் சம்பவம்; முதல் முறையாக மெளனம் கலைத்த சாமியார்!

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
The preacher who broke the silence for the first time on Hadhras Incident

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றியப் பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிழச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனிடையே, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேரை போலீசார் நேற்று முன்தினம் (05-07-24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பித்து ஓடிய சாமியார் போலே பாலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குறிப்பாக மணிபூரி மாவட்டத்தில் உள்ள ராம் குதிர் அறக்கட்டளை கட்டிடத்தில் போலே பாபா பதுங்கி இருக்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சாமியார் போலே பாபா வீடியோ வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “"இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். தயவுசெய்து அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் ஏ.பி. சிங் மூலம், கமிட்டியின் உறுப்பினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் நின்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஹத்ராஸ் சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

cbi

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்தன. 

 

இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையையும் உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், சி.பி.ஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். வழக்கை கண்காணித்தல், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு வழங்குதல், சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் அனைத்தையும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும்" என அறிவித்தது. 

 

இந்தநிலையில், சி.பி.ஐ இந்த வழக்கில் இன்று (18.12.2020) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும், சி.பி.ஐ கொலை மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, வழக்குப் பதிவு செய்துள்ளது. பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் அந்த நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது