Advertisment

ஹரியானா கலவரம்; பசு பாதுகாவலர் கைது

Haryana riots Cow protector arrested

Advertisment

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது மேவாட் பகுதியில் ஊர்வலம் சென்ற போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் காவல்துறையினர் வாகனம் உட்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அந்த வன்முறை சம்பவத்தால் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். மணிப்பூரைத்தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், கலவரம் தொடர்பாக பசு பாதுகாவலர் பிட்டு பஜ்ரங்கி என்கிற ராஜ்குமார் என்பவரை நூஹ் காவல்துறையினர், நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, ”பசு பாதுகாவலர் பிட்டு பஜ்ரங்கி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியதால் தான் மற்றொரு சமூகத்தினர் இந்த ஊர்வலத்தை மறித்துள்ளனர்.அப்போது ஊர்வலத்தில் துப்பாக்கிகளுடன் பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது கூட்டாளிகள் வந்துள்ளனர். இவர்களை மறித்து ஏ.எஸ்.பி உஷா அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து காவல் வாகனத்தில் வைத்துள்ளார். ஆனால், அவர்கள் காவல்துறையினரை மிரட்டி அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துமீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டனர்.

மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான நூஹ் பகுதியில் நடந்த கலவரத்தில், தாக்குதல் நடத்தியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினர். அதன் பின்னர்,பரிதாபாத்திற்கு கொண்டு சென்ற அவரை வன்முறை தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

Advertisment

இதையடுத்து, கலவரம் தொடர்பாக பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 ஆயுதச் சட்ட விதிகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், ஒரு சமூகத்தினரை மிரட்டும் நோக்கில் வீடியோ வெளியிட்ட பிட்டு பஜ்ரங்கியின் கூட்டாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கலவரம் நடந்த ஜூலை 31ஆம் தேதி மதவெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக பிட்டு பஜ்ரங்கி கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

arrest haryana riot
இதையும் படியுங்கள்
Subscribe