ADVERTISEMENT

இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்து சோதனை... எதிர்மறை விளைவுகள் ஏற்படவில்லை எனத் தகவல்...

11:48 AM Jul 18, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தான 'கோவாக்ஸின்' மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டபோது எவ்விதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இந்த மருந்து வேலைசெய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்ற சூழலில், இதனைக்கொண்டு மனிதர்களுக்குச் சிகிச்சையளிக்கும் சோதனையை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பும் அண்மையில் அனுமதி அளித்தது.

இதனைத்தொடர்ந்து இந்த மருந்து மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. சண்டிகரின் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்து அறிவியல் கல்வி நிறுவனத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வரும் சூழலில், மூன்று தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவிதமான எதிர்மறையான விளைவுகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், “பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் கண்டுபிடித்த கரோனாவுக்கான 'கோவாக்ஸின்' தடுப்பு மருந்து மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் பணி ரோடக் நகரில் உள்ள பி.ஜி.ஐ. நிறுவனத்தில் நடந்து வருகிறது.

மூன்று தன்னார்வலர்களுக்கு முதல்கட்டமாக மருந்து உடலில் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு எந்த எதிர்மறையான விளைவுகளும் வரவில்லை. அனைவரும் தடுப்பு மருந்தைத் தாங்குகின்றனர். அடுத்து வரும் நாட்களில் தன்னார்வலர்கள் அதிகமாகச் சேர்க்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT