Skip to main content

குஜராத் தமிழ்ப் பள்ளியை மூட திட்டம்... தமிழக முதல்வர் தலையிடக் கோரிக்கை!!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

 Gujarat Tamil school to be closed... People who refused to buy alternative certificates demanded the intervention of the Chief Minister of Tamil Nadu

 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்த நாட்டில்தான், ஆசிரியர் தினத்தில் 'எங்கள் பள்ளியை மூடாதீங்க' என்று தமிழ்ப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் சாலையில் நின்றனர். யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக இந்த அரசாங்கம் அறிவித்து விருதுகள் வழங்குகிறதோ அவர் குஜராத்தில் திறந்து வைத்த தமிழ்ப் பள்ளிக்குத் தான் பூட்டுப் போடுகிறார்கள்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி, கடந்த 81 வருடங்களுக்கு முன்பு  கிருஷ்ணா தமிழ் வித்யாலயா என்ற பெயரில் வேம்பமரத்தடி பள்ளியாக தொடங்கி படிப்படியாக முன்னேறி 1970 -இல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் கட்டிடங்களை 1954 -ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த பெருமையோடு செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறி பள்ளியை மூட, பள்ளி நிர்வாகமும் மாவட்டக் கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்தான் பெற வேண்டும் என்று மிரட்டல் தொனியில் அந்த அறிவிப்பு இருந்தது.

ஆனால் தமிழ் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களான தமிழர்களும் பள்ளியை மூடக்கூடாது. பள்ளியை மூடினால் படிப்பு வீணாகும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி கல்வி அமைச்சர் வரை சந்தித்துக் கோரிக்கை வைத்தனர். ஆனால் யாரும் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அரசு வைத்த காலக்கெடுவான செப்டம்பர் 23 ஆம் தேதி 'மாற்றுச்சான்றிதழ் வாங்க மாட்டோம், பள்ளியை மீண்டும் செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையோடு மாணவர்களுடன் பெற்றோரும் மற்றவர்களும் போராட வாருங்கள் என்று அழைப்புக் கொடுத்திருந்தனர். அதன்படியே புதன் கிழமை காலையிலேயே தமிழர்கள் பள்ளியில் குவிந்துவிட்டனர்.

இதையறிந்த குஜராத் கல்வி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்போடு பள்ளிக்கு வந்து மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடுகள் செய்த நிலையில், மாற்றுச் சான்றிதழ் வாங்கமாட்டோம் என்ற தமிழர்கள் போராட்டம் வலுவடைந்தது. அதனால் திரும்பிப் போன அதிகாரிகள் நாங்கள் ஏதும் செய்ய முடியாது, தமிழக அரசு தலையிட்டால் உடனே பள்ளி மீண்டும் செயல்படும் என்று கூறிச் சென்றுள்ளனர்.

இது குறித்து, "போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் கூறும் போது.. உலகமெங்கும் சுற்றுப் பயணம் செல்லும் மோடி மூத்த மொழி தமிழ் என்கிறார். திருக்குறள் சொல்லி தமிழின் பெருமையை உலகறியச் செய்கிறார். ஆனால் அவரது சொந்த மாநிலத்தில் 81 வருடம் பாரம்பரியமிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் திறந்து வைத்த மாநிலத்தின் ஒரே தமிழ்ப் பள்ளியை மூடுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

 

Ad


அதேபோல உலக நாடெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை அமைய தமிழ் ஆர்வலர்களுடன் துணையாக நின்று பங்கு தொகையும் வழங்கும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் அலட்சியம் செய்வது, பெரிய வேதனையாக உள்ளது. ஆகவே பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் தலையிட்டு குஜராத் அகமதாபாத் தமிழ் மேனிலைப்பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக அமைச்சர்களைச் சந்திக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.