Gujarat Tamil school to be closed... People who refused to buy alternative certificates demanded the intervention of the Chief Minister of Tamil Nadu

Advertisment

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்த நாட்டில்தான், ஆசிரியர் தினத்தில் 'எங்கள் பள்ளியை மூடாதீங்க' என்று தமிழ்ப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் சாலையில் நின்றனர். யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக இந்த அரசாங்கம் அறிவித்து விருதுகள் வழங்குகிறதோ அவர் குஜராத்தில்திறந்து வைத்த தமிழ்ப் பள்ளிக்குத் தான் பூட்டுப் போடுகிறார்கள்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி, கடந்த 81 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணா தமிழ் வித்யாலயா என்ற பெயரில் வேம்பமரத்தடி பள்ளியாக தொடங்கி படிப்படியாக முன்னேறி 1970 -இல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் கட்டிடங்களை 1954 -ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த பெருமையோடு செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறி பள்ளியை மூட, பள்ளி நிர்வாகமும் மாவட்டக் கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 23 ஆம்தேதி மதியம் 12 மணிக்குள் மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்தான் பெற வேண்டும் என்று மிரட்டல் தொனியில் அந்த அறிவிப்பு இருந்தது.

Advertisment

ஆனால் தமிழ் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களான தமிழர்களும் பள்ளியை மூடக்கூடாது. பள்ளியை மூடினால் படிப்பு வீணாகும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி கல்வி அமைச்சர் வரை சந்தித்துக் கோரிக்கை வைத்தனர். ஆனால் யாரும் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அரசு வைத்த காலக்கெடுவான செப்டம்பர் 23 ஆம்தேதி 'மாற்றுச்சான்றிதழ் வாங்க மாட்டோம், பள்ளியை மீண்டும் செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையோடு மாணவர்களுடன் பெற்றோரும் மற்றவர்களும் போராட வாருங்கள் என்று அழைப்புக் கொடுத்திருந்தனர். அதன்படியே புதன் கிழமை காலையிலேயே தமிழர்கள் பள்ளியில் குவிந்துவிட்டனர்.

இதையறிந்த குஜராத் கல்வி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்போடு பள்ளிக்கு வந்து மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடுகள் செய்த நிலையில், மாற்றுச் சான்றிதழ் வாங்கமாட்டோம் என்றதமிழர்கள் போராட்டம் வலுவடைந்தது. அதனால் திரும்பிப் போன அதிகாரிகள் நாங்கள் ஏதும் செய்ய முடியாது, தமிழக அரசு தலையிட்டால் உடனே பள்ளி மீண்டும் செயல்படும் என்று கூறிச் சென்றுள்ளனர்.

இது குறித்து, "போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் கூறும் போது.. உலகமெங்கும் சுற்றுப் பயணம் செல்லும் மோடி மூத்த மொழி தமிழ் என்கிறார். திருக்குறள் சொல்லி தமிழின் பெருமையை உலகறியச் செய்கிறார். ஆனால் அவரது சொந்த மாநிலத்தில் 81 வருடம் பாரம்பரியமிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் திறந்து வைத்த மாநிலத்தின் ஒரே தமிழ்ப் பள்ளியை மூடுவதைக் கண்டுகொள்ளாமல்இருப்பது வேதனை அளிக்கிறது.

Advertisment

Ad

அதேபோல உலக நாடெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை அமைய தமிழ் ஆர்வலர்களுடன் துணையாக நின்று பங்கு தொகையும் வழங்கும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் அலட்சியம் செய்வது,பெரிய வேதனையாக உள்ளது. ஆகவே பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் தலையிட்டு குஜராத் அகமதாபாத் தமிழ் மேனிலைப்பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக அமைச்சர்களைச் சந்திக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.