Advertisment

ஸ்தம்பித்த குஜராத்; பாஜகவிற்கு எதிராக வெகுண்டு எழுந்த ராஜ்புத் சமூகம்!

gujarat rajput struggle against bjp in rupala speech

Advertisment

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை ஆளும் பாஜக அரசு குஜராத்தை கைப்பற்ற வேண்டும் எனத்தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான ராஜ்கோட்டில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ரூபாலா தனது தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஒன்று தற்போது பாஜகவிற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ''ராஜபுத்திர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்களது வீட்டுப் பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் எங்கள் சமூகம் மதம் மாறவில்லை. எங்கள் சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்தவில்லை..” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு ராஜபுத்திர சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, நாடுமுழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

gujarat rajput struggle against bjp in rupala speech

Advertisment

இதனிடையே, தவறை உணர்ந்த மத்திய அமைச்சர் ரூபாலா ராஜபுத்திர சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், ராஜபுத்திர சமுதாய மக்கள் மனம் மாறவில்லை. ரூபாலாவை பதவி நீக்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ராஜ்கோட் தொகுதியில் நிறுத்தப்படும் ரூபாலாவை திரும்பப்பெற வேண்டும் எனப் பாஜகவுக்கு ராஜபுத்திரர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பாஜக தரப்பில் இதற்கு செவிசாய்க்காததால், குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் போராடுவோம் என்று ராஜபுத்திரர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இச்சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். அதன்படி, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். இதில், ‘நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் ராஜபுத்திரர்கள் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது’ எனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜ்புத் சமூகத்தினர் நடத்திய இரண்டாவது பேரணி இதுவாகும். இந்தப் பேரணியில் லட்சக்கணக்கான ராஜபுத்திர சமூகத்தினர் கலந்துகொண்டனர். இது தொடர்பானவீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

gujarat rajput struggle against bjp in rupala speech

இதனிடையே, பேசிய ராஜ்புத் சங்கலான் சமிதி தலைவர் கரன்சிங் சாவ்தா, ''ஏப்ரல் 19-க்குள் ரூபாலாவின் வேட்புமனுவை பாஜக வாபஸ் பெறவில்லை என்றால், தங்கள் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம்.." என்று தெரிவித்துள்ளார். இது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை பாஜக வெற்றிக்கு உதவிய ராஜபுத்திரர் சமுதாயம் இந்த முறை போர்க்கொடி தூக்கியிருப்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர் ரூபாலாவை திரும்பப் பெறுவது என்பது ராஜ்கோட் தொகுதியில் செல்வாக்குமிக்க அவர் சமூகத்தின் வாக்குவங்கியை பாதிக்கும் எனக் கருதுகிறார்கள். அதனால், இதுவரை எந்த முடிவும் எடுக்க முடியாமல் டெல்லி வெள்ளைக் கொடியை காட்டி வருகிறது. ஆனால், ராஜ்கோட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ரூபாலாவிற்கு சமூதாய ஓட்டு இருப்பதால் அங்கு அவர் தப்பினாலும், அவரின் சர்ச்சைப் பேச்சு ஓட்டுமொத்த ராஜபுத்திர சமுதாயத்தினரைப் பாஜகவிற்கு எதிராக ஒன்றுசேர்த்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இருக்கும் ராஜபுத்திர சமுதாயத்தினர், பாஜகவுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால், அவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச்சர்ச்சை பேச்சு விவகாரம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Gujarat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe