Gujarat interfere NEET examination malpractice

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு நேற்று முன்தினம் (05.05.2024) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.20 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன்14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகிறது. முறைகேடுகளைத் தடுக்க நீட் தேர்வில் மாணவர்களுக்கு கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

Advertisment

இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் என நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Advertisment

இதனையடுத்து, பீகார் மாநிலத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாகவும் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுனர். அதில் 14 பேர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக தேர்வு அறையிலேயே பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். பாட்னாவில் சில விடுதிகளில் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் தொடர்பாக அவர்களை படிக்க வைப்பதாக போலீசாரூக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒவ்வொரு தேர்வர்களிடம் இருந்து தலா ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர் என்ற பகீர் தகவலும் வெளியானது. இதனையடுத்து பீகார் போலீசார் பல்வேறு விடுதிகளில் சோதனை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராகுல் காந்தி உள்பட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக பகீர் தகவல்,விசாரணையில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பன்ச் மகால் மாவட்டம் கோத்ரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்துள்ளது. இந்தத்தேர்வு மையத்தில் துஷார் பட், தேர்வு மையத்தின் துணை சூப்பிரண்டாக பணியில் இருந்தார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம், நீட் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுத்தாள்களில் பதில் எழுதி அனுப்புவதாகக் கூறி ரூ.10 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த 6 மாணவர்களும் ஒப்புக்கொண்டதாகவும், அதில் ஒரு மாணவர் முன்பணமாக ரூ.7 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இதனையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து கோத்ரா தாலுகா போலீசில் புகாரளிக்கப்பட்டு வழக்கு செய்யப்பட்டது. அதன் பேரில், துஷார் பட் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆரீப் வோரா என்ற மாணவர் சார்பில் ரூ.7 லட்சத்தை துஷார் பட்டிடம் வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.