/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay-rupani-flight-art.jpg)
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் 170 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமான விபத்து தொடர்பான அவசர தகவல்களுக்கும், காவல்துறையின் அவசர சேவைகளுக்கும் அகமதாபாத் நகர காவல்துறை சார்பில் 07925620359 என்ற அவசர தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. காந்திநகரில் இருந்து 90 பணியாளர்களைக் கொண்ட 3 தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுக்கள் விமான விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி அகமதாபாத்தின் அசர்வா சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைக் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்காக, தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு உதவி மையம் மற்றும் உதவிப் பகுதி அமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக விமான விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி (வயது 68) படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் இந்த விமானத்தில் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விமானம் விபத்துக்குள்ளாகி மெகானி நகர் மருத்துவ மாணவர் விடுதி பகுதியில் விழுந்ததில் பி.ஜெ. மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 20 மாணவர்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் இந்த விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படத்தை (DP) கருப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)