/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sddd_5.jpg)
குஜராத்தில் அமைச்சரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்து பிரபலமான சுனிதா யாதவ் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. இவர் கடந்த புதன்கிழமை இரவு ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். அவரை மடக்கிய அப்பகுதி பெண் காவலர் சுனிதா யாதவ் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரின் கேள்விகளுக்கு அமைச்சரின் மகன் திமிராகப் பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, "என்னை இங்கிருந்து செல்ல அனுமதிக்காவிட்டால் 365 நாளும் உன்னை இங்கேயே நிற்கவைத்துவிடுவேன். அதற்கு அதிகாரம் இருக்கிறது” என சுனிதாவை மிரட்டியுள்ளார் பிரகாஷ் கனானி.
இதனையடுத்து, கடமையைச் செய்ய இடையூறாக இருந்ததாகவும், மிரட்டல் விடுத்த வகையில் பேசியதாகவும் அமைச்சரின் மகனைக் கைது செய்தார் சுனிதா யாதவ். இந்தச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலனா நிலையில், பல்வேறு தரப்பினரும் சுனிதாவின் தைரியத்தைப் பாராட்டி வந்தனர். ஆனால், சுனிதாவை வேறு காவல்நிலையத்திற்குப் பணியிடமாற்றம் செய்தது அம்மாநில காவல்துறை. இந்நிலையில் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சுனிதா. இதுகுறித்து பேசியுள்ள அவர், "நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். அமைச்சரின் மகன் விதிமுறைகளை மீறியதால் கைதுசெய்தேன். ஆனால் எனது உயர் அதிகாரிகள் எனக்கு முறையாக ஆதரவு அளிக்கவில்லை.
ஏராளமான மிரட்டல்கள், அவதூறு பேச்சுகளைக் கேட்கவேண்டியுள்ளது. ஒரு காவலராக எனது கடமையைச் செய்ததற்கு இதுதான் பரிசு. இது நமது அரசு முறையில் உள்ள தவறு, இந்த அமைச்சர் மகன் போன்றவர்கள் தங்களை வி.வி.ஐ.பி. மகன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் ஐ.பி.எஸ். தேர்வுகளை எதிர்கொண்டு காவல்துறைக்கு அதிகாரியாகத் திரும்புவேன் என்றும், அதில் தோல்வியடைந்தால், வழக்கறிஞராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ சமூகப் பணி செய்வேன் எனவும் மற்றொரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்துள்ளதாக சுனிதா கூறும் நிலையில், அமைச்சர் மகன் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதால் ராஜினாமாவை ஏற்கமுடியாது என சூரத் காவல்துறை ஆணையர் ஆர்.பி. பிரம்மாபாட் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)