
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள மோர்பி என்ற இடத்தில் மச்சு ஆற்றுக்கு மேல் தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தொங்கு பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 230 மீட்டர் நீளமுடைய இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு 140 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த மாதம் 30ம் தேதி, 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில், பாலத்தில் இருந்த மக்கள் உற்சாகத்தில் ஓடி விளையாடியுள்ளனர். இதனால், அந்த தொங்கு பாலமும் ஆடத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், என்ன செய்வது என யோசிப்பதற்குள் அவர்களின் எடையைத் தாங்க முடியாத மோர்பி தொங்கு பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.
இந்த பயங்கர விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். பாலத்திற்கான தகுதிச் சான்றிதழை மாநகராட்சி வழங்காமலேயே பாலம் திறக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த பால விபத்தில் தொடர்புடையதாகக் கூறி இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்துமாறு அம்மாநில உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.