ADVERTISEMENT

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்; சிறுவன் உட்பட மூவர் பலி

04:25 PM Jun 09, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கனகமணி (வயது 72). இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் திருநெல்வேலியை சேர்ந்த உறவினர்கள் ஏராளமானோர் அங்கு வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கனகமணியின் உறவினர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல அங்கு இருந்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதன் மூலம் இறந்தவரின் உடலை கொண்டு திருநெல்வேலிக்கு புறப்பட்டு உள்ளனர். அந்த ஆம்புலன்சில் இறந்தவரின் உடலுடன் கனகமணி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த அவரது உறவினர்களான சேர்ந்த ஞானசேகர் (வயது 51), மௌலிராஜ் (வயது 45) மற்றும் சிறுவன் ஆகாஷ் (வயது17) ஆகியோர் இருந்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் வந்த ஆம்புலன்ஸ் நேற்று அதிகாலை 4 மணியளவில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது தூக்கக் கலக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் இருந்துள்ளார். இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் முன்பகுதி மிகுந்த சேதமடைந்தது. இதில் ஆம்புலன்சின் டிரைவர், திருநெல்வேலியை சேர்ந்த கனகமணி மற்றும் ஆகாஷ் ஆகியோர் உயிரிழந்தனர். ஞானசேகர் மற்றும் மௌலிராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குஜராத்தில் இறந்தவரின் உடலையும், ஆம்புலன்ஸ் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் திருநெல்வேலிக்கு மற்றொரு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். மேலும் குஜராத் ஆம்புலன்ஸ் டிரைவரின் உடலும் வேறொரு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவரின் உடலை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT