
உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர குமார் (26). இவருக்கும் 21 வயது ராதா தேவி என்ற பெண்ணுக்கும் பெற்றோர்களால் திருமண நிச்சய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரவீந்திர குமாரின் குடும்பத்தினர், மணமகள் குடும்பத்திடம் அதிகப்படியான வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு ராதா தேவியின் தந்தை, வரதட்சணை கொடுப்பதாக ஒப்புக்கொண்டு திருமணத்திற்கு முந்தைய சடங்குகளின் போது ரூ.2.5 லட்சம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து திருமணத்தன்று காலையில், ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளார். இது, மணமகனின் குடும்பத்தினருக்கு போதுமானதாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, திருமண விழா ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது குடிபோதையில் வந்த ரவீந்திர குமார், மணமகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இருப்பினும், பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, மாலைகளை பரிமாறிக்கொள்ளும் சடங்கி நடைபெற்றது. அப்போது ரவீந்திர குமார், மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக பக்கத்தில் இருந்த மணப்பெண்ணுடைய தோழிக்கு மாலை அணிவித்தார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராதா தேவி, ரவீந்திர குமாரை அறைந்து திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதையடுத்து, இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நாற்காலிகளை வீசி எறிந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். மணமகளின் குடும்பத்தினரை அவமதித்தற்காகவும், வரதட்சணை கேட்டதற்காகவும் மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகனுக்கு சட்டவிரோத மதுபானத்தை வாங்கி கொடுத்தற்காக ஒருவரை கைது செய்தனர்.