/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ssdfs.jpg)
மே மூன்றாம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில், ஊரடங்கை தளர்த்த வசதியாக சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டுநாட்களில் இந்த ஊரடங்கு காலம் முடிவடைய உள்ளது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் கரோனா பரவலின் தீவிரம் அதிகமாகவே உள்ளது. இதனையடுத்து ஊரடங்கை தளர்த்துவது குறித்தோ அல்லது நீட்டிப்பது குறித்தோ மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் கரோனா பாதிப்பு அளவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியா முழுவதும் உள்ள பகுதிகளை மூன்று பிரிவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தி புதிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இதில் கரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா இல்லாத 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சிவப்பு மண்டலங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. பச்சை மாவட்டங்கள் பட்டியலில் தமிழகத்தில் ஒரு மாவட்டம் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. அதேநேரம் சிவப்பு மண்டலத்தின் கீழ் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசுகள் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மே மூன்றாம் தேதிக்குப் பிறகுஊரடங்கு, ஒருசில பகுதிகளில் தளர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Follow Us