/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3595.jpg)
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது அனைவருக்கும் தலைகுனிவான செயலாகும். சிறந்த தலைவர்கள் ஆளுநராக இருந்துள்ளனர். அவர்கள் இந்திய அரசியலமைப்புக்கு ஏதுவாக தங்களின் கடமைகளைச் செய்துள்ளனர். ஆனால் ஆர்.என் ரவி ஆளுநராகப் பொறுப்பேற்று தமிழக அரசின் திட்டங்களையும், தமிழக அரசையும் வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார். அதனுடைய வெளிப்பாடுதான் ஆளுநர் உரை வாசிக்கப்பட்ட நேரத்தில், தமிழக அரசு ஆளுநர் உரையை அங்கீகரித்து முதலமைச்சர் அந்த கோப்பை பெற்று அதன்பின் ஆளுநர் அதைப் படிக்கும்போது, இந்திய அரசியலமைப்புக்கு முரணாகவும், சட்டமன்ற மாண்புகளைக் குலைக்கும் விதமாகச்செயல்பட்டுள்ளார்.
ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் நடந்துகொண்ட விதம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், மக்கள் நம்பிக்கையை இழக்கும் வகையிலும் உள்ளது. ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் இதுபோன்று எந்த மாநிலத்திலும் ஜனநாயகப் படுகொலை மற்றும் சட்டமன்ற அவமதிப்பு நடந்ததில்லை.
ஆளுநர் உரையில் தனது சொந்தக் கருத்தைப் பதிவு செய்வது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. ஆளுநர் உரையில் சொந்தக் கருத்தைப் பதிவு செய்வதற்கு ஆளுநர் ரவிக்கு அதிகாரம் இல்லை. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதித்துள்ளார். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு பேரவையைவிட்டு வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கைப்பாவையாக ஆளுநர் ரவி செயல்பட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகச் செயல்பட்ட ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத்தலைவர் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆளுநர் பதவியில் இருக்கத்தகுதியற்றவர் ரவி. எனவே அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்குத்தொல்லை கொடுக்கும் மோடி அரசு விரைவில் தூக்கியெறியப்படும். அப்போது மாநிலங்கள் சுதந்திரமாகச் செயல்படும். ஆளுநர் ரவியின் சட்டமன்ற செயல்பாடு ஒரு கரும்புள்ளி.
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இதனால் இளைஞர்கள் தவறான வழிக்குச் சென்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்காவிட்டால், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இரண்டு வருடம் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி முடியப் போகும் நிலையில் ஒரு தேர்தல் வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், ஏன் கூட்டணிக்கு ஆதரவு தரும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக என்.ஆர்.காங்கிரஸார் போராட்டம் நடத்தினர் எனத்தெரியவில்லை. ஆளும் கட்சியே ஆளும் கட்சிக்கு ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்க்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்திருந்தால் அவரிடம் விசாரணை நடத்தலாம். இங்கு ஆட்சி நடைபெறுவது போல் தெரியவில்லை. கோமாளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளது போல் தெரிகிறது. இவர்கள் செய்வதைப் பார்த்து புதுச்சேரி மக்கள் நொந்துபோய் உள்ளனர். யார் யார் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்களோ அவர்கள் நடுரோட்டில் நிற்கும் நிலைதான் ஏற்படும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)