ADVERTISEMENT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை! - உள்துறை அமைச்சக அதிகாரிகள்!

02:29 PM Sep 12, 2018 | Anonymous (not verified)


ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரமில்லை என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவின்படி, தமிழக அமைச்சரவை 9-ந்தேதி கூடி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை சி.பி.ஐ. தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. இதனால், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்னதாக, மத்திய அரசிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிச்சயம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT