/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rn-ravi-sc_0.jpg)
தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்குப்பதிவு செய்யக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அனுமதி கோரியது. இதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. அதேபோன்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரிய நிலையில் அதற்கும் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளுக்கு அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பி வைத்தபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளார்” எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஜி. பாஸ்கரன் மீது வழக்கு தொடரவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவிர எஞ்சிய அரசுப் பதவி நியமன கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்துவிட்டார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி வரை அனுப்பப்பட்ட துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீது சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)