/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/migrant-workers-in.jpg)
உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட கரோனா, இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைத்து நாளொரு மேனியும் பொழுதொரு எண்ணிக்கையுமாக பெருகிவருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கியதையடுத்து, கரோனா கால புலம்பெயர்வுகள், மரணங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது மாநிலவாரியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த எண்ணிக்கையைத் தெரிவித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், “உத்தரப்பிரதேசத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து 32 லட்சம்பேர் திரும்பியுள்ளனர். பீகாருக்கு 15 லட்சம் பேரும், ஒட்டுமொத்தமாக 1 கோடியே நான்கு லட்சம் பேரும் கரோனா காரணமாக தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்” என தெரிவித்தார்.
கேரளா மற்றும் தமிழகத்தில்தான் கரோனா காரணமாக குறைந்த அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். தமிழகத்துக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,050 ஆகும். அதேசமயம் கரோனா ஊரடங்கில் புலம்பெயர்ந்தபோது இறந்தவர்களின் விவரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது மத்திய அரசு இதுகுறித்து தன்னிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லையென மறுத்துள்ளது. அதனால் யாருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளது. ரயிலிலும், சாலையிலும், கால்நடையாகவும் புலம்பெயர்ந்தபோதுவிபத்திலும் உடல்நலக்குறைவு காரணமாகவும் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 198 என சேவ் லைஃப் பவுண்டேஷன் அமைப்பு மே 31-ஆம் தேதி தெரிவித்திருந்தது.
இத்தகைய கொடூர தொற்று நிலவும் காலகட்டத்தில் இடம்பெயரும் தொழிலாளர்களை தேசமே கண்கொண்டு பார்த்த நிலையில் அதுகுறித்து உரிய தரவுகள் இல்லையென மத்திய அரசு கூறுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“ஒரு தனியார் அமைப்பு இத்தனை சீரியஸாக இறந்தவர்களின் எண்ணிக்கையை அக்கறையுடன் கணக்கிடமுடியும்போது, அரசாங்கம் இன்னும் எளிதாகவும் துல்லியமாகவும் இந்த கணக்குகளை பதிவிடமுடியும். நம் அரசாங்கம் இத்தகைய தரவுகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்” என சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)