
அரசுப் பேருந்தைஹைஜாக் செய்து பயணிகளோடு கடத்திய நபர் நடுவழியில் பேருந்து நின்றதால் திக்கித் திணறி நின்ற சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தில் 35 பயணிகள் பேருந்து புறப்படுவதற்காக காத்திருந்தனர். அப்பொழுது பேருந்தில் ஏறிய நபர் ஒருவர் பயணிகளிடம் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டு டிக்கெட் கட்டணத்தை வசூலித்துள்ளார். பிறகு பேருந்தையும் அவரே இயக்கியுள்ளார். அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நடத்துநர் வருவார் அவர் உங்களுக்கு உரிய டிக்கெட்டுகளை தருவார் என்றுகூறியுள்ளார் அந்த ஆசாமி. தொடர்ந்து பேருந்தானது சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்துச் சென்றது.
அப்பொழுது திடீரென டீசல் இல்லாததால் பாதி வழியிலேயே பேருந்து நின்றது. உடனே பேருந்தை விட்டு அந்த நபர் இறங்கினார். சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை வீடியோ எடுக்கத்தொடங்கினர். உண்மையிலேயே நீங்கள் தான் இந்த பேருந்தின் ஓட்டுநரா என்பது போல விசாரிக்கத்தொடங்கினர். அப்பொழுது தான் தெரியவந்தது, அந்த நபர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தை எடுத்துச் சென்று காயிலாங் கடையில் எடைக்குப் போட முயன்றது.
இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு போலீசார் வருவதற்கு முன்பு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதே நேரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தைகாணவில்லை என ஒரிஜினல் ஓட்டுநர் சாமி, சித்திபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பயணிகள் எடுத்த வீடியோ அடிப்படையில் தேவராஜலு என்ற அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)