ADVERTISEMENT

பட்டியலின கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் வளைகாப்பு; அமைச்சர் அறிவிப்பு

11:02 PM Mar 29, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

“பட்டியலின கர்ப்பிணிகளுக்கு காரைக்கால் அம்மையார் பெயரில் அரசே வளைகாப்பு நடத்தும்” என புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

புதுச்சேரியில் ரேசன் கடைகளில் சிறுதானியங்களான கேழ்வரகு, சோளம் உள்ளிட்டவை மானிய விலையில் விநியோகிக்கப்படும் எனவும் ரேசன் கார்டு சேவைகள் குறித்த புகார் பெற கால்சென்டர் அமைக்கப்படும் எனவும் குடிமைப்பொருள் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, "போக்குவரத்துத் துறையில் வாகனங்கள் புதுப்பித்தல் சான்றிதழ் (FC) எடுக்க ஜி.பி.எஸ், வேகக்கட்டுபாட்டு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் அரசு பேருந்துகளில் பயணக்கட்டணம் செலுத்த பிரிபெய்டு டிக்கெட் கார்டு அறிமுகப்படுத்தப்படும்" என்றார். மேலும், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகளில் மாலை நேர ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு காரைக்கால் அம்மையார் வளைகாப்பு அணியும் திட்டத்தை ஏற்படுத்தி அரசே அவர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தும்” என அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், காரைக்காலில் செயல்படும் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேசிய அளவில் நட்சத்திரக் கல்லூரி அந்தஸ்து பெற்றுள்ளதாகவும், அது வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார். மேலும், கோவிட் நோயால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2,000 மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும் எனவும், ஊனமுற்ற விதவை பெண்களுக்கு இதுவரை வழங்கி வந்த ரூ. 2,000 உதவித்தொகை ரூ. 3,000 ஆக உயர்த்தப்படும் எனவும், காரைக்கால் மாவட்டத்தில் விளைநிலங்களில் படர்ந்து கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வருவோருக்கு ஹெக்டேருக்கு ரூ. 15 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT