Skip to main content

இனி இலவசமாக பணப்பரிமாற்றம் செய்ய முடியாதா? கூகுள் பே நிறுவனம் விளக்கம்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

G pay

 

கூகுள் பே செயலியானது அதிகப்படியான மக்களால் பயன்படுத்தக் கூடிய பணப்பரிமாற்றச் செயலியாகும். இந்தச் செயலி வழியாகப் பணப்பரிமாற்றம் செய்ய எந்தக் கூடுதல் கட்டணமும் கிடையாதென்பதாலும் இது கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதென்பதாலும் பலரது விருப்பத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய செயலியாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் கூகுள் பே தளம் செயல்படாது என அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாகவே கூகுள் பே நிறுவனம் தன்னுடைய இலவச சேவையை நிறுத்தவுள்ளது என்றும் இனி பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து கூகுள் பே விளக்கம் அளித்துள்ளது.

 

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட இணையதளம் வாயிலான கூகுள் பே மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பயனாளர்கள் புதிய கூகுள் பே செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டண அறிவிப்பு என்பது அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் இந்த வசதியைத் தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் லஞ்சம் வாங்கிய காவலர்கள்; போலீஸ் கமிஷனர் அதிரடி

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

manimangalam police google pay amount collect issue

 

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக மணிபாரதி (வயது 33) என்பவரும், இரண்டாம் நிலை காவலராக அமிர்தராஜ் (வயது 32) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வழக்கம் போல் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர்.

 

இந்நிலையில் படப்பை அருகே சாலையோரம் காரை நிறுத்தி திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடியினர் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த மணிபாரதியும், அமிர்தராஜும் இவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் விதத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு இளம் ஜோடியினர் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். அதற்கு காவலர்கள் உங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பதிவு செய்தால் என்ன ஆகும் தெரியுமா என்று கூறியதுடன். கூகுள் பே செயலி மூலம் 4 ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள் என்று கூறியுள்ளனர்.

 

இதனால் பயந்துபோன அந்த இளம் ஜோடியினர் தாங்களது கூகுள் பே செயலி மூலம் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகார் ஒன்று மணிமங்கலம் போலீசாருக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர்  விசாரணை செய்ததில் காவலர்கள் இருவரும் இளம் ஜோடியினரை மிரட்டி லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனைத் தொடர்ந்து காவலர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

 

 

Next Story

“கூகுள் பே மூலம் எப்படி பணம் பறிப்பார்கள்?” - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

"How do you extort money with Google Pay?" Explanation by DGP Shailendra Babu

 

கோவை சரக தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பரவிய வதந்திகள் பொய் செய்திகளை நல்ல முறையில் கையாண்ட தொழிலதிபர்களுக்கு பாராட்டுகள். இப்பொழுது நிலைமை சீராக உள்ளது என்றாலும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் பொய்யான வதந்திகள் தொடர்ந்து பரவுகிறது. அவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை கைது செய்ய நமது காவல்துறையினர் வெளி மாநிலங்களில் முகாமிட்டுள்ளனர். தற்போது வரை 11 வழக்குப் பதிவுகள் செய்துள்ளோம். யார் செய்தார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதெல்லாம் புலன் விசாரணையில் தெரிய வரும். அதிகமானோர் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அதில் சிலருக்கு சில அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளது. புலன் விசாரணையின் இறுதியில் தகவல்களை கொடுக்கிறோம்.

 

செல்போனில் இணைய வசதி இருந்தால் உலகில் உள்ள மக்களில் யார் வேண்டுமானாலும் உங்களை தொடர்பு கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் ஒரு பொய் சொல்லி உங்களை நம்ப வைத்து உங்கள் வங்கிகளில் உள்ள பணத்தை ஒட்டு மொத்தமாக எடுத்து செல்லலாம். கூகுள் பேயில் உங்களது கணக்கில் 100 ரூபாயோ 5000 ரூபாயோ போடலாம். அப்பொழுது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நம் கணக்கிற்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று. அப்பொழுது ஒரு அழைப்பு வரும். இந்த பணத்தை தெரியாமல் போட்டுவிட்டேன் என்று. நான் ஒரு லிங்க் அனுப்புகிறேன். அதில் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று சொல்வார்கள். யார் லிங்க் அனுப்பினாலும் அதில் எந்த தகவலையும் கொடுக்காதீர்கள். உங்களுக்கு ஓடிபி வந்து அதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்றால் அதை லிங்க் அனுப்பியவர் மொத்தமாக எடுத்துச் சென்று விடுவார். 

 

யாராவது உங்களுக்கு பணம் அனுப்பினாலோ அல்லது வங்கிக் கணக்கில் பணம் போட்டாலோ நீங்கள் அதை சட்டை செய்யாதீர்கள். அந்த நபரை ப்ளாக் செய்யுங்கள். காவல் நிலையத்திற்கு சொல்லுங்கள். அந்த நபர் ஒரு குற்றவாளி. இன்று வீட்டையெல்லாம் உடைத்து திருடுவது கிடையாது. அதற்கான தேவையும் இல்லை. உங்கள் வங்கிகளில் இருக்கும் பணத்தை சர்வ சாதாரணமாக எடுத்து விடுவார்கள்” எனக் கூறினார்.