மருத்துவரைத் திட்டி இடைநீக்கம் செய்ததால் சர்ச்சை; மன்னிப்பு கேட்ட பா.ஜ.க அமைச்சர்!

goa minister suspended a doctor and immediately apologizes after opposition!

கோவா யூனியன் பிரதேசத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக விஸ்வஜித் ரானே என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரிடம், கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவரால் தவறாக நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் விஸ்வஜித் ரானே, கடந்த 7ஆம் தேதி கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு திடீரென்று ஆய்வு நடத்தினார். அப்போது சிகிச்சை அளிக்க மறுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிகரை அழைத்து கடுமையாக எச்சரித்தார். அதுமட்டுமல்லாமல் அவரை கோபமாக திட்டினார். அதனை தொடர்ந்து, தலைமை மருத்துவ அதிகாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறியதாவது, ‘நீங்கள் உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மருத்துவர். நீங்கள் என் முன் நிற்கும்போது உங்கள் கைகளை உன் பைகளுக்குள் இருந்து எடுக்க வேண்டும் . நீங்கள் எவ்வளவு சுமையாக இருந்தாலும், நோயாளிகளிடம் சரியாகப் பேசி, நோயாளிகளை வழிநடத்த வேண்டும்’ என்று கூறினார். பின்னர் அவர், மருத்துவ கண்காணிப்பாளரிடம், ‘அவரை இங்கிருந்து துரத்துங்கள்’ என்று கூறி, மருத்துவரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. சில பேரிடம் இருந்து அமைச்சருக்கு ஆதரவு வந்தாலும், ஒரு மருத்துவரை இப்படியா நடத்துவது? என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த செயலுக்கு கோவாவில் உள்ள இந்திய மருத்துவர் சங்க கிளையும் கடும் கண்டனம் தெரிவித்தது. இது ஒரு அவமானகரமான செயல் என்று கூறியதுடன், அவரின் இடைநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமல்லாமல், 48 மணி நேரத்தில் அமைச்சர் பொது மன்னிப்பு கேட்கவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக கோவா குடியிருப்பு மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது.

கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (08-06-25) அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கோவா மருத்துவக் கல்லூரியில் இந்தப் பிரச்சினையை நான் மறுபரிசீலனை செய்து, சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடினேன். டாக்டர் ருத்ரேஷ் குட்டிகர் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார் என்பதை கோவா மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், தனது நடத்தைக்காக சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘எனது நடத்தைக்காக சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் சுகாதார சேவைகளில் ஒழுக்கமின்மையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மாநிலத்தின் மிக நீண்ட காலம் பணியாற்றிய சுகாதார அமைச்சர். மருத்துவ அவசரநிலைகள் தொடர்பாக கோவா குடிமக்களிடமிருந்து நாளின் எந்த நேரத்திலும் எனக்கு நேரடியாக அழைப்புகள் வருகின்றன. கோவா மருத்துவக் கல்லூரி மூலம் சிறந்த சுகாதார வசதிகளை வழங்க நான் எப்போதும் பாடுபட்டுள்ளேன். ஆனால் யாராவது தங்கள் கடமையை புறக்கணித்தால், அவர்களைத் தடுக்க நான் தயங்க மாட்டேன்’ என்று கூறினார்.

Doctor Goa minister suspend viral video
இதையும் படியுங்கள்
Subscribe