Skip to main content

சிறுமிக்கு பாலியல் கொடுமை;8 கிலோ மீட்டர் நடந்தும் கிடைக்காத உதவி; செத்துப்போன மனிதநேயங்கள்!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

The girl walked 8 kilometers but did not get help; loss humanities

 

நிர்பயா, ஆசிபா முதல் சமீபத்தில் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டது வரை பெண்களுக்கான பாலியல் வன்முறைகளும் கொடுமைகளும் நாளுக்கு நாள் அரங்கேறித்தான் வருகின்றன. அப்படி மீண்டும் ஒரு பெண் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை மீண்டும் நாட்டையே உலுக்கியுள்ளது.

 

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைன் நகரில் 12 வயது சிறுமி ஒருவர் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் பட்டப்பகலில் வீதி வீதியாக அழுதபடி நடந்து சென்ற அந்த காட்சிகள் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ரண வேதனையை நிச்சயமாக ஊட்டும். ஆடைகள் கிழிந்த நிலையில் உதவி கேட்ட அந்த சிறுமிக்கு யாருமே உதவ முன்வரவில்லை. பிறப்புறுப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த சிறுமி அழுது கொண்டே நிற்கும் காட்சியும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் உதவி கேட்க 'போ போ இங்கெல்லாம் நிற்காத' என்று சைகையில் துரத்தி விடும் காட்சியும் பெண்களுக்கு எதிரான கோரமுகத்தை இன்னமும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

 

சொல்லில் சொல்லமுடியாத வலியுடன் அந்த சிறுமி சுமார் இரண்டு மணிநேரம் 8 கிலோ மீட்டர் இதே நிலையில் நடந்திருக்கிறார். இந்த 8 கிலோமீட்டர் பயணத்தில் ஒரு மனித மனம் கூட அவருக்கு உதவி செய்ய மறுத்ததுதான் கொடுமையிலும் கொடுமை. இறுதியில் நடக்கத் தெம்பின்றி அந்த சிறுமி மயங்கி விழுந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னரே இதற்கான கண்டனக் குரல்களும் போராட்டங்களும் எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளார்.

 

தற்பொழுது சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜே வாலா, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், மம்தா பேனர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Boy incident by electrocution Chief Minister MK Stalin obituary

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தேவேந்திரன் என்பவர், அப்பகுதியில் உள்ள அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது சிறுவன் தேவேந்திரன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

மேலும் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் தேவேந்திரன் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.