நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.

Advertisment

girish mahajan about bjp ncp allaince and sanjay raut

மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. அதேபோல அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை" என தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் பவாரின் இந்த திடீர் கூட்டணியை சிவசேனாவின் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரான கிரிஷ் மகாஜன், "170 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். அஜித் பவார் தனது எம்.எல்.ஏ.க்களை ஆதரிப்பது குறித்து ஆளுநருக்கு கடிதம் அளித்துள்ளார். மேலும் அவர்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் என்பதால், அனைத்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர் என்றே அர்த்தம். பல சிவசேனா எம்.எல்.ஏக்கள் சஞ்சய் ராவத் மீது விரக்தியடைந்துள்ளனர், அவர்களும் விரைவில் எங்களுடன் இணைவது குறித்து யோசிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.