நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் ஜீரோ ஹவர், கேள்வி நேரம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் தடுப்பூசி ஒதுக்கீடு, பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மழைக்கால கூட்டத்தொடரானது மொத்தமாக 19 அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு 31 சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற அலுவலகத்தின் முன் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ''அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும். மத்திய அரசு கூறும் விளக்கங்களை எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாகுபலி போல வலுவானவராக அனைவரும் உருவாக வேண்டும். கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.