
45 வயது பழங்குடியின பெண்ணை கூட்டு பாலியல் செய்து கொலை செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட 45 வயது பெண். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவர், கடந்த 23ஆம் தேதி ரோஷ்னி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். திருமண விழா முடிந்த பிறகு மாலை 6 மணியளவில் ஹரி என்பவர், தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார். அவரும் ஹரி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, மற்றொரு நபரான சுனில் என்பவரும் வந்த பிறகு, மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஹரியும், சுனிலும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு அடுத்த நாள் காலையில், பாதிக்கப்பட்ட பெண் காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட ஹரியின் தாய், பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து, குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கோ அல்லது வேறு யாரிடமோ அவர்கள் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் படுகாயமடைந்த அந்த பெண், திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹரி மற்றும் சுனில் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.