/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_194.jpg)
புதுச்சேரி கூடப்பாகம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன்(50) என்பவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி கருணாகரன் வழக்கம் போல் தனது மளிகைக் கடையிலிருந்த போது கல்லூரி மாணவி ஒருவர், தான் பக்கத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.பெற்றோர்கள் இல்லாததால் கணுவாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வருவதாகவும், தற்போது தனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் எனவும் கருணாகரனிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கருணாகரனின் மேல் வீடு காலியாக இருந்த நிலையில், தனது வீடு காலியாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டையே தனக்கு வாடகைக்குத் தரும்படி மாணவிகூற, கருணாகரனும் சரி என்று சொல்லியுள்ளார். மேலும் இரண்டு நாட்கள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படி கருணாகரன் கூற, இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தினமும் நீண்ட நேரம் ஃபோனில் பேசி வந்துள்ளனர்.
தொடர்ந்து ஃபோனில் பேசி வந்த இருவரும் அவ்வப்போது வெளியே சந்தித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில்தான் சம்பவத்தன்று இரவு கருணாகரனை அந்தப் பெண் தனிமையில் சந்திக்க வெளியே அழைத்துள்ளார். அதனையடுத்து கருணாகரனும் அந்தப் பெண்ணைதனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத கணுவாப்பேட்டை பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கருணாகரன் ஆடைகளைக் கழற்றியவுடன் அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக ரூ. 2 லட்சம் பணம் வேண்டும் இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளனர். அதனால் கருணாகரன் கையில் எடுத்து வந்த ரூ. 50 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். மேலும் தனது நண்பருக்குக் கால் செய்து ரூ. 75 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து கருணாகரனை மட்டும் அந்த கும்பல் விடுவித்த நிலையில், பதறிப் போன அவர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய நம்பரைவைத்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈட்டுப்பட்டது கணுவாப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ்(21) மற்றும் ராமு(22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், ராமு மனைவியின் நண்பர்தான் அந்தக் கல்லூரி மாணவி என்பதும் அவரை வைத்துத்தான் இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், கல்லூரி மாணவி மற்றும் அவரது கூட்டாளி அருண் ஆகியோரைத்தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)