
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரந்தனூர் பகுதியை சேர்ந்தவர்கள் மோகனன் - ரேஷ்மா(24) தம்பதி. விவசாயியான மோகனனின் மனைவிக்கு கடந்த மாதம் சுகப்பிரசவமாக வீட்டிலேயே பெண் குழந்தைபிறந்துள்ளது. வீட்டில் அவருடன் யாரும் இல்லாத நிலையில், ரேஷ்மா பிறந்த பச்சிளம் குழந்தையை அன்று இரவே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் இறந்த பச்சிளம் குழந்தையைக் குழிதோண்டி புதைத்துள்ளார். குழந்தை குறித்து மோகனன் கேட்டபோது பிறந்தவுடன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
பெரிதும் சந்தேகமடைந்த மோகனன் தொடர்ந்து குழந்தை குறித்து விசாரித்த காரணத்தினால் அவரது மனைவிதான் கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ரேஷ்மா மீது மோகனன் பரந்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் வெளியான தகவல்களானது, “முகநூல் மூலம் அனந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேரில் கூட சந்திக்காமல் தொடர்ந்த இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதீத காதல் ஏற்பட்டதால் ரேஷ்மா அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டுள்ளார்.
அனந்துவை திருமணம் செய்துகொள்ள விரும்பிய ரேஷ்மா குழந்தை இடையூறாக உள்ளதென எண்ணி குழந்தையைக் கொலை செய்து புதைத்துள்ளார். மேலும், இதுகுறித்து அனந்துவை பிடித்து விசாரிக்க நினைத்த காவல்துறையினர், அவரை தேடிச் சென்றபோது கூடுதலாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், ரேஷ்மாவுடன் பழகிய அனந்து என்ற முகநூல் பக்கத்தை முழுவதும் ஆய்வுசெய்துள்ளனர். அப்போது அந்தப் பெயரில் பேசியது இரண்டு இளம்வயது பெண்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் களுவாதிகள் என்ற ஊரைச் சேர்ந்த ரஞ்சித் மனைவி ஆர்யா (23), ராதாகிருஷ்ணன் மகள் சுருதி (22) என்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு பெண்களே அனந்து என்ற பெயரில் ரேஷ்மாவிடம் ஆண் குரலில் பேசி ஏமாற்றியுள்ளனர்.
ரேஷ்மா குறித்த தகவல்களைப் பத்திரிகைசெய்திகளின் மூலம் தெரிந்துகொண்ட இரு பெண்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நாம் மாட்டிக்கொண்டால் கடினம் என எண்ணி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், ரேஷ்மா கைது செய்யப்பட்ட 2 நாட்களில் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்” என விசாரணையில் தெரியவந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)