Skip to main content

ஜி 20 உச்சி மாநாடு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

G20 Summit Security arrangements are strict

 

ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

 

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களால் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்துக்கு நாளை (01.09.2023) முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதால் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு 3 நாட்களுக்கு 160 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தரும் 80 விமானங்களும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 80 விமானங்களின் பயண சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே போன்று ஜி20 உச்சி மாநாடு நடப்பதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி வான்பரப்பில் ட்ரோன்கள், டிரோன் கேமிராக்கள் ரிமோட் ஏர் கிராப்ட், சிறிய வகை விமானங்கள், ராட்சத பலூன்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்