G-20; Mallikarjuna Karke who was ignored at the dinner party

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

Advertisment

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில்,இன்று இரவு ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரவு உணவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மேலும், மம்தா பானர்ஜியும் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குடியரசுத் தலைவரின் இரவு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த இரவு விருந்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், அனைத்து அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.