Skip to main content

ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்கமுடியாது - எரிபொருள் விற்பனையாளர்கள்...

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

விமான எரிபொருளுக்கான பணம் வழங்கப்படாததால் நாடு முழுவதும் 6 விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு இனி எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என இந்தியன் ஆயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் எரிபொருள் விற்பனை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 

Fuel supply to Air India stopped at 6 airports

 

 

இந்தியன் ஆயில் தலைமையிலான எரிபொருள் விற்பனை கூட்டமைப்பு, ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டிணம், புனே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் இருந்து செயல்படும் ஏர் இந்தியா விமானகளுக்கு ஜெட் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. 

எரிபொருள் விற்பனை கூட்டமைப்புடன் இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஏர் இந்தியா ஏற்கனவே இதற்காக ரூ.60 கோடியை மொத்த தொகையாக செலுத்தியுள்ளதாகவும் விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசியுள்ள ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "சரியான ஆதரவு இல்லாத நிலையில் ஏர் இந்தியாவால் மட்டும் இப்படி மிகப்பெரிய கடன்களை கையாள முடியாது. இருப்பினும் ஏர் இந்தியா இப்போது வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. லாபங்களும் வர ஆரம்பித்துள்ளது" என கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து; அலறியடித்து ஓடிய மக்கள்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Boiler explosion accident in Indian Oil Company in chennai

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகிறார்கள்.  இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று (27-12-23)இந்த நிறுவனத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த விபத்தால், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

இதனையடுத்து, அப்பகுதியில் தீப்பற்றி எரிந்து பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், பாதிப்புள்ளாகிய ஊழியர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதில், சரவணா மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சரவணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியை சுற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால், திடீரென்று எண்ணெய் கசிவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

போர் பதற்றம்; விமான சேவை ரத்து!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

air india Flight to Tel Aviv canceled

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லியிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.