Skip to main content

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
A freight train ran without a driver

ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சரக்கு ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் எஞ்சினில் கை பிரேக்கை இழுக்க மறந்து ஓட்டுநர்கள் இறங்கிச் சென்றதாலும், தண்டவாளம் சரிவு காரணமாக ரயில் தானாகப் புறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதே சமயம் லந்தர் - பதான்கோட் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து கிராசிங்குகளும் உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.