/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mahadev-gamb-ni.jpg)
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர் அவரது நண்பர் ரவி உப்பால் இருவரும் சேர்ந்து மாகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கி அதை செயல்படுத்தி வந்தனர். இந்த செயலி தேர்தல் முடிவுகளை கணிப்பது முதல் வானிலை முன்னறிவிப்புகள் என பல்வேறு துறைகளில் நான்கு ஆண்டுகள் செயல்பட்டு வந்துள்ளது. இதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், அமலாக்கத்துறை செயலியின் செயல்பாடுகளை கண்காணிக்க, வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்த தொடங்கியது.
இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருவதும் 70-30 சதவீத விகிதத்தில் கிளைகளை நடத்தி வருபவர்களுக்கு லாப பங்கீடு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா, போபால், மும்பை ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை 417 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக அறிவித்தது.
இதனை தொடர்ந்து, இந்த செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் சந்திரகரின் திருமணம் கடந்த பிப்ரவரியில் துபாயில் நடைபெற்றது. ரூ.200 கோடி செலவில் இந்த திருமணம் நடந்ததாக அமலாக்கத்துறையினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதில் 17 பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஹவாலா முறையில் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறியது.
மேலும், இந்த செயலி மீதான சோதனைகளின் போது, கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான கார் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த சோதனையில் சிக்கிய ஆசிம் தாஸ் என்ற ஊழியரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக இருந்த பூபேஷ் பாகலுக்கு சூதாட்ட செயலி உரிமையாளர்கள் ரூ.508 கோடி கொடுத்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். இது சத்தீஸ்கர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தி ரூ.6,000 கோடி வரை பணமோசடி நடந்திருப்பதாகக் கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் செயலியின் உரிமையாளர்களான இருவருக்கும் எதிராக சிறப்பு பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சூதாட்ட செயலியின் உரிமையாளர்கள் இருவரையும் பிடிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அவர்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதை தொடர்ந்து, அவர்களை பிடிக்க அமலாக்கத்துறை சர்வதேச போலீசாருக்கு கோரிக்கை விடுத்தது. அமலாக்கத்துறையின் கோரிக்கையின் அடிப்படையில், சர்வதேச போலீஸ் அவர்கள் இருவருக்கும் எதிராக ‘ரெட் கார்னர்’ அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்த ரவி உப்பாலை கடந்த வாரம் உள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் துபாய் காவல்துறையைதொடர்பு கொண்டுள்ளனர். இந்த செயலியின் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகரை தேடும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)