Four people hit dalit family madhya pradesh

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவரின் வீட்டைத் தாக்கி குடும்பத்தை அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், சிவபுரி மாவட்டத்தில் உள்ள லால்பூரைச் சேர்ந்தவர் அஜ்மீர் சிங் பரிஹார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உள்ளூர் நிகழ்வின் போது டிஜே இசை தொடர்பாக இவருக்கும், வேறு சமூகத்தைச் சேர்ந்த நஹர் சிங் தாக்கூர் என்பவருக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது. அதன் பின்னர், அது நீண்ட கால பகையாக மாறியுள்ளது.

Advertisment

இதற்கிடையில், நஹர் சிங் வேறு ஒரு வழக்கில் சிறை சென்றுள்ளார். இந்த நிலையில், ஜாமீனில் இருந்து வெளியே வந்த நஹர் சிங், தனது மூன்று சகோதரர்களுடன், அஜ்மீர் சிங்கின் வீட்டிற்கு வந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொடூரத் தாக்குதல் நடத்தினார். மேலும், அஜ்மீர் சிங் வீட்டில் இருந்த ஒரு பெண்ணையும், ஒரு இளைஞரையும் தாக்கினர். இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பட்டியலின முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தாக்குதல் நடத்திய 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.