/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dgfg_0.jpg)
ராஜஸ்தானின் பிவாடி பகுதிகளில் செயல்படுகிற நர்னால் கேபிள் சர்வீசஸ், ஃபவுலாட் வடம் நிறுவனம் உட்பட சில ஆபரேட்டர்கள் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் இந்தியாகாஸ்ட் நிறுவனம், அதன் பைரஸி ஒழிப்பு முகமையான 'காமக்யா' மூலம் பதிவு செய்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
TV18 பிராட்காஸ்ட் லிமிடெட் மற்றும் வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான இந்தியாகாஸ்ட் தளம் பைரஸிக்கு எதிராகத் தொடர்ந்து இயங்கிவருகிறது. அந்தவகையில், ராஜஸ்தானில் TV18 மற்றும் வயாகாம்18 சேனல்களை அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒளிபரப்பிய குற்றத்திற்காக 1860ம் ஆண்டின் இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் 1957ம் ஆண்டின் காப்புரிமை சட்டத்தின்கீழ் அந்நிறுவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது.
இப்புகார்களின் அடிப்படையில், ஆறுக்கும் அதிகமான இடங்களில் அதிரடி சோதனை நடத்திய போலீஸார், அனுமதி பெறாத பகுதிகளில் சேனல் ஒளிபரப்பும் பயன்படுத்தப்படும் டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் நோடுகள் போன்ற சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக, இதுவரை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் நான்கு பேரும் 5 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இந்தியாகாஸ்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், "ஒளிபரப்பு திருட்டைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமான இந்த செயல் முயற்சியில் விரைவான மற்றும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கான பிவாடி காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஒளிபரப்புக்கான உள்ளடக்கத் திருட்டு என்பது ஊடக தொழில்துறைக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் கவலையளிக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில், ஒளிபரப்பு நிறுவனத்தின் வருவாயை இது நேரடியாக பாதிப்பது மட்டுமன்றி, ஒட்டுமொத்த உள்ளடக்க வழங்கல் சங்கிலித் தொடரில் மேற்கொள்ளப்படும் உழைப்பையும் மதிப்பிழக்கச் செய்துவிடுகிறது. வயாகாம்18 மற்றும் TV18 நெட்வொர்க் உடன் இணைந்து இந்தியாகாஸ்ட் தொடர்ந்து பைரஸியை எதிர்த்துப் போரிடும். சட்டப்படி அணைத்து வழிமுறைகளையும் பின்பற்றி சேனல் உள்ளடக்கங்களைப் பாதுகாக்கும்.” என்றார்.
உரிய அனுமதியின்றி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்பி வந்த THOP TV செயலிக்கு எதிராகப் புகார் அளித்து அந்த செயலியை நடத்தும் நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முதலில் துவங்கியதும் வயாகாம்18 நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய அனுமதியின்றி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கான ஆன்லைன் பார்வையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் THOP TV வழங்கிவந்ததாக அந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாக பல நிறுவனங்களுக்கும் கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இப்புகாரின் மீதான முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மகாராஷ்ட்ர மாநில காவல்துறையின் சைபர் செல் THOP TV-ன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரைக் கைது செய்தது.
61க்கும் மேற்பட்ட சேனல்களை பல்வேறு தளங்களுக்கும் முறைப்படி விநியோகித்துவரும் இந்தியாகாஸ்ட் நிறுவனம், அது நிர்வகிக்கும் அனைத்து குழுமங்களின் சேனல்கள் மற்றும் உள்ளடக்கத்தை உலகளவில் விநியோகம் செய்வதோடு, அவற்றை வணிகப்படுத்துதல், விளம்பர விற்பனை, டிஜிட்டல் ஊடக விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)