Skip to main content

'இதயத்திலிருந்து போராடினேன்' - கண்ணீருடன் ஓய்வை அறிவித்த சாக்‌ஷி மாலிக்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 'Fought from the heart'-Sakshi Malik tearfully announces retirement

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்கு பிறகு பிரிஜ் பூஷண் தலைமை பதவியில் இருந்து விலகி விட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சாக்‌ஷி மாலிக் இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டபோது கண் கலங்கிய சாக்‌ஷி மாலிக் தன்னுடைய காலணியை எடுத்து மேஜை மேல் எடுத்து வைத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு ஒரு பெண் தலைவர் வேண்டும் என தான் விரும்பியதாகவும் அது நடக்கவில்லை என்பதால் தான் ஓய்வு பெறுவதாகவும், இந்த தேர்தலில் பிரிஜ் பூஷண் தொடர்புடையவர்கள் யாரும் போட்டியிட வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது வருத்தம் அளிப்பதாகவும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.