Skip to main content

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி(95) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் தனது வழக்கறிஞர் பணியில் இருந்து விலகி ஓய்வில் இருந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராம் ஜெத்மலானி காலமானார். இவர் ஒருங்கிணைந்த இந்தியா- பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 

former union minister, senior supreme court lawyer ram jethmalani passed away delhi



இந்தியா- பாகிஸ்தான் பிரிப்புக்கு பின் மும்பையில் குடியேறி வழக்கறிஞராக பணியாற்றினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர், நகர்ப்புற அமைச்சகராக பணியாற்றினார். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர் ராம்ஜெத் மலானி. அதேபோல் 2ஜி வழக்கில் ஆஜராகி வாதாடினார். இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களில் ஒருவர் ராம்ஜெத் மலானி. இவர் தான் வாதாடிய அனைத்து வழக்குகளிலும் வெற்றி கண்டார் என்பது அனைவரும் அறிந்தது.  

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.