ADVERTISEMENT

பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் அளித்த ஐந்து பரிந்துரைகள்!

02:29 PM Apr 19, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா இரண்டாவது அலை, முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக, தினமும் இரண்டு லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகள் கேட்டும், படுக்கைகள் கேட்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தநிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

மன்மோகன் சிங் அக்கடிதத்தில், இந்தியா தற்போது அவசர நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், கரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து, அதற்கு ஐந்து பரிந்துரைகளை அளித்துள்ளார்.

மன்மோகன் சிங் அளித்துள்ள முதலாவது பரிந்துரை: மத்திய அரசு, அடுத்த ஆறு மாதங்களுக்கு எத்தனை தடுப்பூசிகளுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை தடுப்பூசிகளுக்கான ஆர்டர் ஏற்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பினால், அதற்குத் தேவையான தடுப்பூசி ஆர்டர்களை முன்கூட்டியே வழங்க வேண்டும். அதனால் தடுப்பூசி நிறுவனங்களால் ஒப்புக்கொண்டபடி, தடுப்பூசிகளை வழங்க முடியும்.

இரண்டாவது பரிந்துரை: தடுப்பூசிகள் எவ்வாறு மாநிலங்களுக்கு, வெளிப்படையான ஃபார்முலா மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். தடுப்பூசிகளில் 10 சதவீத தடுப்பூசிகளை அவரச தேவைக்காக வைத்துக்கொள்ளலாம். மற்றபடி மாநிலங்கள் தங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் திட்டமிடும் வகையில், தடுப்பூசி இருப்பு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.

மூன்றாவது பரிந்துரை: 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், சில பிரிவுகளை வகுக்க மாநிலங்களுக்கு தளர்வு வழங்கப்பட வேண்டும். உதாரணமாக ஆசிரியர்கள், பஸ், ஆட்டோ டிரைவர்கள், பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி செலுத்த மாநிலங்கள் விரும்பலாம். அவர்கள் 45 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தாலும் தடுப்பூசி செலுத்தலாம்.

நான்காவது பரிந்துரை: கடந்த சில பத்தாண்டுகளில், இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளராக மாறியுள்ளது. இதற்கான திறன், தனியார் துறையில் பெருமளவில் உள்ளது. இந்தப் பொது சுகாதார அவரச நிலையில், தடுப்பூசி தயாரிப்பாளர்கள் அவர்களது தயாரிப்பு வசதிகளை வேகமாக அதிகரிக்க, மத்திய அரசு அவர்களுக்கு நிதியுதவி மற்றும் சலுகைகளை அளித்து ஆதரிக்க வேண்டும். சட்டத்திலுள்ள கட்டாய உரிமம் விதிமுறையைப் பயன்படுத்த இதுவே சரியான நேரம் என நம்புகிறேன். இதன்மூலம் நிறைய நிறுவனங்கள் உரிமத்தின் கீழ் தடுப்பூசியை தயாரிக்க முடியும்.

ஐந்தாவது பரிந்துரை: உள்நாட்டு தடுப்பூசி விநியோகம் குறைவான அளவில் உள்ளதால், நம்பிக்கையான வெளிநாட்டு மருந்து கட்டுப்பாட்டு ஆணையங்களால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை, உள்நாட்டில் சோதனையின்றி இந்தியாவில் அனுமதிக்க வேண்டும்.

இந்த ஐந்து பரிந்துரைகளை அளித்துள்ள மன்மோகன் சிங், சரியான கொள்கையை அமைப்பதன் மூலம், இன்னும் வேகமாகவும், மேலும் சிறப்பாகவும் செயல்பட முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அரசு இந்தப் பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அதன்படி செயலாற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT