
ஆட்டோ டிரைவருடன் சண்டை போட்ட சிறிது நேரத்திலேயே முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலம் போண்டா தொகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் வரை எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்தவர் லாவூ மம்லேதர். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், இன்று கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியில் தனது காரில் முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, மம்லேதரின் வாகனம் ஆட்டோ ஒன்றின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, மம்லேதருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த மம்லேதர், ஆட்டோ ஓட்டுநரை அறைந்தார். பதிலுக்கு ஓட்டுநரும், மம்லேதரை அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை பார்த்த சுற்றியிருந்தவர்கள், ஓட்டுநரை தள்ளிவிட முயன்றனர். ஆனாலும், அவர் மீண்டு மம்லேதரை தாக்கினார். அதன் பின்னர், சுற்றியிருந்தவர்கள் நிலைமையை சரி செய்தனர். அதனை தொடர்ந்து, மம்லேதர் லாட்ஜுக்குள் சென்றார். லாட்ஜில் இருந்த படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக வர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏவின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை என்றாலும், ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.