/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sajjann.jpg)
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 1984, அக்டோபர் 30-ஆம் தேதி அவருடைய சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் காரணமாக நாடு முழுவதும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லி ராஜ்நகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், டெல்லி சரஸ்வதி பகுதியைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் மற்றும் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டு அவர்களது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சஜ்ஜன் குமார் தலைமையிலான ஒரு கும்பல் நடந்ததியாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி, சஜ்ஜன் குமார் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு சஜ்ஜன்குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அதில், சஜ்ஜன் குமாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதால் கடந்த 2021ஆம் ஆண்டு அந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கு, இத்தனை காலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சஜ்ஜன் குமாரை குற்றவாளி என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், சஜ்ஜன் குமாருக்கு தண்டனை விவரங்களை இன்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதில், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆயுள் தண்டனையைத் தவிர, கலவரத்தில் ஈடுபட்டதற்காக 2 ஆண்டுகள், கொடிய ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதற்காக 3 ஆண்டுகள் மற்றும் அபராதம், கடுமையான தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. டெல்லி கண்டோன்மெண்ட் கலவர வழக்கில் தொடர்புடைய ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சஜ்ஜன் குமாருக்கு, இது இரண்டாவது ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)