Skip to main content

காங்கிரசிலிருந்து விலகுகிறார் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்! பாஜகவில் இணைய முயற்சி?

Published on 01/10/2021 | Edited on 01/10/2021
ff

 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் ஆட்சி பொறுப்பில் இருந்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பிரபல கிரிக்கெட் வீரர் சித்துவை சில மாதங்களுக்கு முன்பு நியமித்தார் காங்கிரசின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி. சித்துவின் நியமனத்துக்கு பிறகே அம்ரீந்தர் சிங்குக்கும் சித்துவிற்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தபடி இருந்தது. சித்துவிற்கு ராகுல் மற்றும் சோனியாவிடம் அம்ரீந்தர் சிங்  வைத்த குற்றச்சாட்டுகள் கவனிக்கப்படவில்லை. அதேசமயம், அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக சித்து வைத்த குற்றச்சாட்டுகள் வலிமையடைந்தன. ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு அம்ரீந்தர்சிங்கிற்கு கட்சி தலைமையிடமிருந்து அழுத்தம் தரப்பட்டது.  இதனை ஏற்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அம்ரீந்தர். சித்துவின் ஆதரவாளர் முதல்வர் பதவியில் நியமிக்கப்பட்டார். 

 

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து. இது மேலும் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநில காங்கிரசில் ஏக குழப்பங்கள் அதிகரித்தன. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தலைவர்களில் ஒருவருமான அமீத்சாவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிவிட்டு வந்தார் அம்ரீந்தர் சிங்!  காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் அவர், அமீத்சாவை சந்தித்து பேசியதால் விரைவில் அவர் பாஜகவில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் ரெக்கைக் கட்டிப் பறந்தன! இந்த சூழலில் இது குறித்து மனம் திறந்த அம்ரீந்தர்சிங், ‘’ காங்கிரஸ் கட்சியிலும் அரசியலிலும் 52 ஆண்டுகளாக இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை காங்கிரஸ் தலைமை நடத்திய விதம் ஆரோக்கியமாக இல்லை. வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. அதனால், காங்கிரசில் தொடர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. விரைவில் அக்கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். காங்கிரசின் இளம் தலைவரான ராகுல் காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனையை கேட்பதில்லை. இத்தகை போக்குகள், சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் காங்கிரஸுக்கு நல்லதில்லை. 

 

சித்து முதிர்ச்சியற்றவர். அப்படிப்பட்ட அந்த நபர் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை எப்படி வழிநடத்துவார் ? என பலமுறை சொல்லியிருக்கிறேன். கேட்க மறுக்கிறார்கள். காங்கிரசில் இருந்து விலகப்போகும் நான் , பாஜகவில் சேரமாட்டேன் ‘’ என்று தெரிவித்திருக்கிறார். அம்ரீந்தர் சிங் இப்படி சொன்னாலும் காங்கிரசிலிருந்து அவர் விலகியதும் நிச்சயம் பாஜகவில் சேர்வார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முதல்வராகவும் முன்னிறுத்தப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், அம்ரீந்தர் சிங்கை தங்கள் கட்சிக்குள் கொண்டுவர வலை வீசி வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அம்ரீந்தர்சிங்கை தொடர்புகொண்டு  இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் பஞ்சாப் காங்கிரசில் செய்தி பரவி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாதுகாப்பை வாபஸ் வாங்கிய அரசு; அடுத்த நாள் பாடகர் கொடூர கொலை

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

punjabi singer sidhu moose wala passed away

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்நதவரும், பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தனது பாடல்கள் மூலம் துப்பாக்கிக் கலாச்சாரம், கேங்ஸ்டர் கலாச்சாரம் உள்ளிட்டவற்றைப் புகழ்ந்து பாடி அதனை ஊக்குவிப்பதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மான்ச தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

 

இதனைத்தொடர்ந்து பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றது. இதையடுத்து, பகவந்த் மான் தலைமையிலான அரசு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை வாபஸ் பெற்று வருகிறது. அந்த வகையில், அண்மையில் 420 முக்கிய பிரமுகர்களுக்கு அளித்து வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அதில்  பஞ்சாபி பாப் பாடகர்  சித்து மூஸ் வாலாவும் ஒருவர்.

 

இந்நிலையில் பாடகர் சித்து மூஸ் வாலா மான்சா மாவட்டத்தில் நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். அதில் அவருடன் காரில் சேர்ந்து பயணித்த இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பாடகர் சித்து மூஸ் வாலா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாடகர்  சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட அடுத்த நாளே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்'- பஞ்சாப் அரசு முடிவு!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்குவதற்கு, பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக அம்ரீந்தர் சிங் உள்ளார். இந்நிலையில் முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நேற்று (19/09/2019) மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு உயர்நிலை பள்ளிகளில் பயிலும் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

punjab cabinet decide 11th, 12th schools study girl students govt has provide smart phone


 

இதன்படி, முதல் கட்டமாக நடப்பு கல்வியாண்டு முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 11- ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கும் வரும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 'ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவிகளுக்கு மட்டுமே, அரசின் இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும் என்று அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
 

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.