Skip to main content

ஜெய் ராம் என கோஷமிடுமாறு தாக்குதல் - திஹார் சிறை கைதி நீதிமன்றத்தில் புகார்!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

tihar jail

 

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குழுவில் இருந்ததாகவும், டெல்லியில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர் ரஷீத் ஜாபர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகாமையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்தநிலையில் ரஷீத் ஜாபரின் வழக்கறிஞர், சிறையில் சக கைதிகள் அவரை அடித்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடுமாறு துன்புறுத்தியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். ரஷீத் ஜாபர் தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசியபோது தான் தாக்கப்பட்டதை அவரிடம் கூறியதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

 

மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க சிறை கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்குமாறு ரஷீத் ஜாபரின் வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். கைதி ஒருவர், சிறைச்சாலைக்குள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்புமாறு கூறி தான் தாக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Insulin for Arvind Kejriwal in jail

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் அளித்த மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மனு கடந்த 18 ஆம் தேதி (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார். இந்நிலையில் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Insulin for Arvind Kejriwal in jail

இது குறித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “நாங்கள் கோரிய இன்சுலின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ளது. கடந்த 23 நாட்களாக அவருக்கு இன்சுலின் ஏன் கொடுக்கப்படவில்லை?. டெல்லி திகார் சிறை அரவிந்த் கெஜ்ரிவாலின் சித்திரவதை அறையாக மாறியுள்ளது. 24 மணி நேரமும் அவர் பிரதமர் அலுவலகம் மற்றும் துணை நிலை ஆளுநரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.