Skip to main content

நகைக்கடையில் புகுந்த வெள்ளம்; 2.5 கோடி மதிப்பிலான நகைகள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Floods entered the jewelery shop; jewels worth 2.5 crores were washed away causing excitement

 

பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் புகுந்த வெள்ளத்தில் கடையிலிருந்த தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஸ்வரம் பகுதியில் நிகான் ஜுவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அங்கு பெய்த திடீர் கனமழை காரணமாக பெங்களூர் நகரமே வெள்ளக்காடானது. இதனால் சாலையில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியுற்றனர். அப்பொழுது அந்த பகுதியில் அமைந்திருந்த நிகான் ஜுவல்லரி நகைக்கடைக்குள் வெள்ளநீர் புகுந்தது.

 

இதில் கடையிலிருந்த ஒட்டுமொத்த நகைகளில் 80 சதவீத நகைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. கடை உரிமையாளர் நகைகளை மீட்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்புகொண்டும் உதவி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அடித்துச் செல்லப்பட்ட நகைகளின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தான் நிகான் ஜுவல்லரி கடையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிற நிலையில், வெள்ளத்தில் கடையின் நகைகள் அடித்துச் செல்லப்பட்டது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.