ADVERTISEMENT

ஐந்து மாநில தேர்தல் - கட்டுப்பாடுகள் என்னென்ன?

05:42 PM Jan 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியில் இன்று (08/01/2022) செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, "கரோனா, ஒமிக்ரான் பரவும் சூழலில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலானது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஐந்து மாநில தேர்தல் நடத்தப்படும். கரோனா பரவல் அதிகரிக்காத வகையில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 24.9 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்களாக உள்ளனர்.

ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மருத்துவ நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு களஆய்வு அடிப்படையில் தேர்தலை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒரு வாக்குச்சாவடியில் 1,250 முதல் 1,500 பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2.16 லட்சமாக அதிகரித்துள்ளது. இத்தேர்தலில் 80 வயது முதியோர், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும். பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்காக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவதை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது. குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் போது அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முன்வர வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இ- விஜில் என்ற செயலியில் பொதுமக்கள், தேர்தல் தொடர்பாக புகார்களை அளிக்கலாம்.

தேர்தல் பணியில் இருக்கும் அலுவலர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். கரோனா, ஒமிக்ரான் காரணமாக, வாக்குப்பதிவு நேரம் ஒருமணி நேரம் நீட்டிக்கப்படும். அரசியல் கட்சிகள் முடிந்தவரை டிஜிட்டல் முறையில் தங்களின் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். ஜனவரி 15- ஆம் தேதி வரை தொடர்பான எந்த பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது. ஜனவரி 15- ஆம் தேதிக்கு பின் சூழலைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் வெளியிடப்படும். தேர்தல் முடிவுக்கு பிறகு வெற்றி ஊர்வலங்களும் அனுமதிக்கக் கூடாது. ஜனவரி 15- ஆம் தேதி வரை அரசியல் கட்சியினர் நேரடியாக பரப்புரையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடு, வீடாக சென்று வாக்குச் சேகரிக்க ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏழு கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் 10- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்". இவ்வாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT