Advertisment

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்: ஆட்சியமைக்கப்போவது யார்? - ஏபிபி- சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு வெளியீடு!

rahul - amitshah- aravind kejriwal

Advertisment

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்த ஐந்து மாநிலங்களிலும் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என ஏபிபி ஊடகமும் சி-வோட்டர்ஸும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் ஏபிபி - சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவுள்ளது. தேர்தலில் பாஜக 41.3 சதவீத வாக்குகளையும், சமாஜ்வாடி கட்சி 32 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 15 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜக 241 முதல் 249 இடங்களைப் பெறும் எனவும், சமாஜ்வாடி 130 முதல் 138 இடங்களைப் பெறும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி 15 முதல் 19 இடங்கள் வரையும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்கள் வரையும் பெறும் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

பஞ்சாப்

Advertisment

பஞ்சாப் மாநில தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்றும், ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் எனவும் ஏபிபி - சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அம்மாநில தேர்தலில் ஆம் ஆத்மி36 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 32 சதவீத வாக்குகளையும், ஷிரோமணி அகாலிதளம் 22 சதவீத வாக்குகளையும், பாஜக 4 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சிகள் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஆம் ஆத்மி 49 முதல் 55 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 47 இடங்களையும்,ஷிரோமணி அகாலிதளம் 17 முதல் 25 இடங்களையும் வெல்லும் என அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் பாஜக 45 சதவீத வாக்குகளையும்,காங்கிரஸ் 34 சதவீத வாக்குகளையும்,ஆம் ஆத்மி 15 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சியினர் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

தொகுதி அடிப்படையில், பாஜக 42 முதல் 46 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 21 முதல் 25 இடங்களையும், ஆம் ஆத்மி 4 இடங்கள் வரையும் வெல்லலாம் என அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் கடும் போட்டி ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அம்மாநில தேர்தலில் பாஜக 36 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 34 சதவீத வாக்குகளையும், நாகா மக்கள் முன்னணி 9 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 21 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 21 - 25 இடங்களையும், காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களையும், நாகா மக்கள் முன்னணி 4 - 8 இடங்களையும், மற்றவர்கள் 1 முதல் ஐந்து இடங்களையும் வெல்லும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

கோவா

கோவா மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. அம்மாநில தேர்தலில் பாஜக 38 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 23 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 18 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சியினர் 21 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத் தொகுதிகள் அடிப்படையில், பாஜக 24 முதல் 28 இடங்களையும், காங்கிரஸ் 1 முதல் 5 இடங்களையும், ஆம் ஆத்மி 3 முதல் 7 இடங்களையும், மற்றவர்கள் 4 முதல் 8 இடங்களையும் வெல்வார்கள் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஏபிபி - சி-வோட்டர்ஸின் கருத்துக்கணிப்பின்படி, தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது. மேலும், மணிப்பூர் மாநிலத்திலும் அதிக இடங்களில் பாஜக வெல்லவுள்ளது.

Aam aadmi congress Punjab uttarpradesh Assembly election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe