Fishermen  demanding to ban  short nets

Advertisment

சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறி, அரசு சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதித்துள்ளது. தற்போது மீன்பிடி தடை விலகி மீன்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி புதுச்சேரி,கடலூர் ஆகிய பகுதிகளில் ஒருதரப்பு மீனவர்கள் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இதேபோல் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பு மீனவர்களும் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.

புதுச்சேரி கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலான 18 கிராம மீனவர்கள் கடந்த 19ஆம் தேதிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விசைப்படகு, ஃபைபர், எஃப்.ஆர்.பி படகு, கட்டுமர உரிமையாளர்கள், மீனவர்கள் ஆகியோர் புதுச்சேரியில் காந்தி சிலை எதிரே கடலில் படகுகளுடன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 120 விசைப்படகுகள், ஃபைபர் படகுகள், எஃப்.ஆர்.பி கட்டுமர படகுகளுடன் 250க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், மீனவர்கள் கடலில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.

Advertisment

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் புதுச்சேரியில் சுருக்குமடி வலை பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இந்தப்போராட்டம் குறித்து செய்தியாளரிடம் பேசிய புதுச்சேரி ஃபைபர் படகு உரிமையாளர்கள், "புதுச்சேரியில் சுருக்குமடி வலை பயன்படுததி மீன்பிடிக்க அரசு அனுமதிக்கக் கூடாது. இதனால் மீனவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே இதைப் புதுச்சேரி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் படகுகளுடன் கடலில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்" என்றனர்.

தலைமைச் செயலகம் முன்பு நடந்த போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தப் போராட்டத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில், கிழக்கு எஸ்.பி ரக்க்ஷனா சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.