/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lok-sabha-new-art_2.jpg)
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தொடர்ந்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிடியில் தான் ஆட்சி இருக்கப்போகிறது.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இதன் மூலம் 18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. இதனையொட்டி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது தற்காலிக சபாநாயகர் தேர்வு, நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மக்களவை தற்காலிக சபாநாயகருக்கு உதவி செய்யும் குழுவின் 3 உறுப்பினர் பொறுப்புகளையும் ஏற்காமல் நிராகரிப்பதாக இந்தியா கூட்டணி அறிவித்திருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)