Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisment

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Advertisment

இன்னர் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.